உலகச்செய்திகள்

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என அறிவிப்பு

இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலில் ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்பு இருப்பதாக நிரூபிக்கப்படுவதற்கான போதுமான சாட்சியம் இதுவரை இல்லை என நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சட்ட விரோதமான கைது தொடர்பாக, நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம் (IPU) ஏகமானதாக எடுத்துள்ள தீர்மானத்தில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

உலகின் 179 தேசிய நாடாளுமன்றங்கள் மற்றும் 13 பிராந்திய நாடாளுமன்ற சபைகளினை அங்கத்துவமாகக் கொண்ட, தேசிய நாடாளுமன்றங்களின் மிகப்பெரிய சர்வதேச அமைப்பாகிய நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கைது மற்றும் தடுப்புக் காவல் தொடர்பாக விசாரணை நடத்தி, அவ்விடயம் தொடர்பான தனது முடிவை வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ம் தேதி, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து, மே மாதம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து, நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியமானது, குறித்த முறைப்பாட்டினை மிக தீவிரமாக விசாரணை நடாத்தியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி, ஸ்பெயினின் மட்ரிட் நகரில் நடைபெற்ற நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் 208வது அமர்வில், இந்த விடயத்தின் மீதான முடிவு, ஒன்றியத்தின் ஆளும் குழுவால் ஏகமனதாக விவாதிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில், ‘ஈஸ்டர் தாக்குதல்களுக்கு உதவியதாகவும் உடந்தையாக இருந்ததாகவும்’ குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.