Economy

அற்புதமான திட்டம்.. இந்தியாவை பாத்து கத்துக்கணும்.. IMF பாராட்டு!

இந்தியாவின் நேரடி பணப் பரிமாற்ற திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு.

இந்தியாவின் நேரடி பணப் பரிமாற்ற திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

அரசு திட்டங்களின் பயனாளிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கிலேயே பணம் செலுத்துவதற்கான ‘உங்கள் பணம் உங்கள் கையில்’ (Direct Benefit Transfer) என்ற நேரடி பணப் பரிமாற்ற திட்டம் 2013ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், அரசு திட்டங்களின் பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் நேரடி பணப் பரிமாற்ற திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிதி விவகார துறை துணை இயக்குநர் பாலோ மவுரோ பாராட்டு தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் ஆண்டு கூட்டங்கள் நடைபெறுகின்றன. அங்கு செய்தியாளர்களிடம் பேசிய பாலோ மவுரோ, “இந்தியாவிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. உலகம் முழுவதும் மற்ற சில நாடுகளிடமும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

எல்லா கண்டங்களிலும், எல்லா வருமான நிலைகளிலும் உதாரணங்கள் இருக்கின்றன. இந்தியாவை எடுத்துக்கொண்டால் மிக சிறப்பாக செயல்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய அளவை வைத்து பார்க்கும்போது நேரடி பணப் பரிமாற்ற திட்டம் ஒரு அற்புதம்.

குறைந்த வருமானம் ஈட்டி வரும் பல லட்சக்கணக்கான மக்களுக்கு திட்டங்களின் பயன்கள் சென்று சேருகின்றன. அதேபோல, பெண்களை மட்டும் குறிவைத்து திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதேபோல முதியோர், விவசாயிகளுக்கு தனி திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன” என்று பாராட்டியுள்ளார்.